அலங்காரம் ஆனந்தியும் கீதாவும்
விளையாட்டிற்கு வினிதாப் பொறுப்பு
சமையல் சியாமளாவும் சீதாவும்
பொங்கல் கொண்டாட்டத்திற்கு
திட்டமிட்டத் தோழிகள் - நீமட்டும்
சும்மாயிரு என்று என்னை ஒதிக்கியதால்
வில்லிகளாய் தெரிந்தார்கள் என் கண்களுக்கு
கொண்டாட்டத்தின் போது
அலங்காரம் முழுதும் பூக்களும்
பிள்ளைகளின் சிரித்த புகைப்படமுமாய்
என் கண்களுக்கு விருந்தாய்
எல்லாப் போட்டிகளுக்கும்
நானே நடுவர் எப்போதும்
நாற்காலியில் அமர்ந்தே
களித்து இன்புறும்படி
உணவு எல்லாமே
புளிப்பு தூக்கலாய்
உறைப்பு குறைவாய்
என் ருசிக்கேற்ப
இது உனக்குப் பிடிக்குமே
இது உனக்காகவே செய்தது
இன்னும் கொஞ்சம் சாப்பிடு
தான் உண்ணாமல் என்னை
வற்புறுத்திய தோழிகள் -
தாயாக தயாராகிக் கொண்டிருக்கும்
என் கண்களுக்குத் தெரிகிறார்கள் என் தாயாராய்