செத்த மீனும் வெள்ளாட்டுக்கறியும்
3/23/2008 | Author: பாண்டியன் புதல்வி
"செத்த மீன் தானேடா இப்பக் கிடைக்கும். வெய்யக்காலம் வரட்டும் பாக்கலாம்". எப்போதும் வெள்ளாட்டுக் கறி வாங்கிவரும் தாத்தவை, மீன் வாங்கிவரக்கேட்ட அண்ணனுக்கு பதிலுறைத்தார் தாத்தா.

ஒவ்வோரு வாரமும் தாத்தா ஆட்டுக்கறி வாங்கிவருவதே ஒரு சுகமான அனுபவம் தான். ஞாயிறு காலையில் அம்மாக் கொடுக்கும் காப்பியைக் குடித்ததும் ஒரு மஞ்சள் துணிப்பையை நான்காய் மடித்துக் கைகளில் இடுக்கிக்கொள்வார். சட்டை அணியமாட்டார். காடாதுணியில் கைவைத்து தைத்த உள்பனியனுடன் புறபடுவார். பல சமயங்களில் நாங்களும் தொற்றிக்கொள்வோம்.

இரண்டுத்தெருத் தள்ளி இருக்கும் பாய் மாமா கடை மட்டுமே தாத்தவின் தேர்வு. கடையை ஒட்டி இருக்கும் பாய் மாமாவின் வீட்டுத்திண்ணையில் அமர்வார். நாங்கள் அங்கே கட்டி இருக்கும் ஆட்டுக்குட்டிக்கு புல் தருவதும் கட்டியணைப்பதுமாய் விளையாடத் தொடங்குவோம். பாய் மாமாவின் மகனை பாய் அண்ணா என்று அழைப்போம். அவரும் எங்களுடன் சேர்ந்துக்கொள்வார், கடைக்கு கூட்டம் வரும்வரை, பாய் மாமா உதவிக்கு அழைக்கும்வரை.

பாய் மாமா கடை என்பது ஒரு கூரையும் அதன் அடியில் குறுக்காக வெட்டப்பட்ட பெரிய அகன்ற மரத்துண்டு மட்டுமே. அந்த மரதுண்டு பாய் மாமவின் இடுப்பளவிற்கு வரும், கறி வெட்டும் மேடையாக இருக்கும். அந்த வயதில் அது என்ன மரம் என்று நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவர் அதன் மேல் கறி வெட்டும் சத்தமும், பச்சைக் கறியும் அந்த மரத்தின் வாசமும் இரண்டற கலந்து உண்டாகும் ஒரு மணமும் இன்னும் நினைவில் உள்ளது.

கூரையில் இருந்துத்தொங்கும் இரு நீளக்கொக்கியில் தோல் உரித்த ஆடுகளைக் கொக்கிக்கொன்றாய்த் தொங்கவிட்டிருப்பார். வால் நுனியில் மட்டும் சில ஆட்டு ரோமங்கள் நீக்கப்படாமல் இருக்கும்.

மாமா கறி வெட்டும் இலாகவமும் அவரது கத்தியின் கூர்மையும் எனக்கு ஆச்சரியம் ஊட்டுபவை. எவ்வளவு வேகமாய் வெட்டினாலும், எவ்வளவு வலிமையுடன் வெட்டினாலும் அது கறியை தவிர மரத்தின் பரப்பை வெட்டாது. ஒரு சிறு மரத்துண்டு பெயர்ந்ததற்கான அறிக்குறிக்கூட இருக்காது அந்த மேடையில். கொத்துக்கறி வாடிக்கையாளர் வந்துவிட்டால், கலைக்கட்டும் கறி கடை. சங்கீதம் இரசிப்பதுப்போல சிலாகித்து, 'வேலக்காரன்டா நீயி' என்று பாய் மாமாவைப் பாராட்டுவார் தாத்தா. சின்ன முறுவலுடன் அதை ஏற்றுக் கொள்வார் பாய் மாமா.

தாத்தா எதுவும் சொல்லமாட்டார். இடுப்பில் கட்டியிருக்கும் பெல்டில் இருந்து பணம் எடுத்துத்தருவார். அவரின் கையில் இருக்கும் பையில் இப்போது வெள்ளாட்டுக்கறி இருக்கும். எது வேண்டும் எவ்வளவு வேண்டும் என்று தாத்தா சொன்னதில்லை; தாத்தாக் கொடுக்கும் பணத்தை பாய் மாமா எண்ணிப்பார்த்ததும் இல்லை.

எங்களுரின் அருகில் இருக்கும் கடலில் மீன் பிடித்து, பனிக்கட்டிகளுக்கு நடுவே அவற்றை பத்திரப்படுத்தி மீன் சந்தையில் கொண்டுவந்து விற்பார்கள். தாத்தா சொன்ன செத்த மீன் இதுதான். அவர் எப்போதும் எங்கள் ஊர் குளத்தில் பிடிக்கப்படும் மீன் மட்டுமே வாங்குவார்.

பெரும்பாலும் கோடைவிடுமுறையின் போது எங்களுக்கு ஒரு இனியப்பொழுதுப்போக்காய் அமையும் குளக்கரையும் மீன் பிடிப்பும். அதிகாலையில் தாத்தா குளக்கரைச் சென்றுவிடுவார். மீன் வாங்குவோர் முன் பதிவுச் செய்ததற்கு ஏற்ப மீன் பிடிப்பு நடக்கும். தாத்தா முன்பதிவு செய்து காத்திருக்க, அப்பாவின் மிதிவண்டியில் நாங்களும் சென்று சேர்ந்துக்கொள்வோம். சிறிய பையில் அம்மா துண்டும், மாற்று உடைகளும் கொடுத்தனுப்பி இருப்பார். அப்பா அந்த பையை தாத்தாவிடம் கொடுத்துவிட்டு மீன் பையை வாங்கிக்கொண்டு வீடு திரும்புவார். தாத்தாவின் மேற்பார்வையில் நன்பர்களுடன் ஆட்டம் போட்டு விட்டு குளித்து முடித்து வீடு திரும்புகையில் அம்மவின் கைமணத்துடன் மீன் குழம்பு பசியைத்தூண்டும்.

' ஏய்! என்ன யோசனை? அந்தப் பேக்கைப்பார் எக்ஸ்பைரி டேட் இரண்டு நாள் அதிகமாய் இருக்குப் போல, அப்போ அது மற்றதைவிட ஃபிரஷ்ஷாக இருக்கும்' நண்பரின் குரல் நினைவுலகுக்கு என்னை இழுத்துவந்தது. முதலில் எடுத்த பதப்படுத்தி பாதுக்காக்கப்பட்ட மீனை மீண்டும் அதன் இடத்தில் வைத்துவிட்டு, 2 நாள் அதிகம் வாழ்ந்த, செத்த மீனை வாங்கிக்கொண்டு வீடுத்திரும்பினோம்.

**************************************************************************************

கதையின் கதை: என் சிறுவயது நினைவுகளை சற்றே செம்மைப்படுத்தி சிறுகதை படைக்க முயன்றிருக்கிறேன்.
வெயில் காலத்தில் மட்டுமே குளத்தில் மீன்பிடிப்பு என்பதின் பின்ணணியில், நம் முன்னோரின் அனுபவம் நமக்கு சொல்லும் பாடம் ஏராளம்.
பாய் மாமா என்றும் பாய் அண்ணா என்றும் அழைத்த அந்தத் தோழமை, அதை அனுமதித்த தலைமுறையினர் இன்று எங்கே? அவர் வழி வந்திருந்தாலும் எவரையும் சந்தேகக் கண்ணோட்டத்துடனேயே நட்புப்பாரட்ட நாம் கற்றது எப்படி? அது யார் தவறு?
இக்கதையில் வருவதுப் போல் அன்றாட நிகழ்வுகளைக்கூட இனிய நினைவுகளாக நம் மனதில் பதியவைத்தது எது?
எதற்கு?
3/23/2008 | Author: பாண்டியன் புதல்வி
படித்ததை பதிக்க, படைப்பதை பாதுக்காக்க.
சில சமயம் ஆறுதல் அடைய/தர, சேர்ந்து கற்றுயர.
என்னுள் என்னைக் கண்டெடுக்க; என் ஆற்றலை எனக்கு அறிமுகப்படுத்த.
எண்ணங்களை எழுதி வைக்க; எழுதியதைப் படித்து உவக்க
ஏன்?
3/23/2008 | Author: பாண்டியன் புதல்வி
படிப்பதில் ஆர்வம் உண்டு. படிக்கும் வழக்கம் படைக்கும் ஆர்வத்தை தூண்டியமையால், ஓர் சிறு முயற்சியாய் இந்த வலைப்பூ.